ஆஸ்திரேலியா, சிட்னி சர்வதேச மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்களில் 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தோ- பசுபிக் கடல்சார் சர்வதேச கண்காட்சி இன்று காலை ஆரம்பமானது. நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னரே பெருமளவான பாலஸ்தீன ஆதரவாளர்கள் மாநாட்டு மண்டப வளாகத்தில் குவிந்தனர்.
குறித்த கண்காட்சியில் இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, ஆஸ்திரேலியாவிலுள்ள பாலஸ்தீன ஆதரவாளர்களால் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போராட்டம் நடந்துகொண்டிருக்கையில் கட்டுப்பாட்டு கோட்டை மீறி முன்னோக்கி நகர்வதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டதால் அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதன்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதன்போது ஏற்பட்ட குழப்பத்தின்போதே 13 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நியூ சவூத் வேல்ஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.