சூடானில் உள்நாட்டு போர் ஆரம்பமாகி மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது.
சூடான் தேசிய ராணுவத்துக்கும், அந்நாட்டின் துணை ராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் போர்ஸ் இற்கும் இடையேயான ‘அதிகார’ மோதலானது மூன்றாண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிர்களைப் பறித்துள்ளது.
சுமார் 1.2 கோடி பேர் அவர்களது வசிப்பிடங்களை விட்டு உள்நாட்டிலேயே முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சூடானில் நீண்ட காலமாக நடக்கும் உள்நாட்டுக் கலவரத்தால் அங்கே 2.4 கோடி மக்கள் தீவிர உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
எல் பசார் அருகே உள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கான ஜம்ஜம் முகாமில் கூட உணவுப் பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. கூடவே காலரா உள்ளிட்ட தொற்று நோய்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் சூடானில் மனிதாபிமான உதவிகளை முன்னெடுப்பதற்காக 10 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.
ஐ.நா. மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு குறித்த நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.