காசாவில் இரண்டு ஆண்டு காலம் நிலைமாற்ற அரசு ஒன்றை அமைப்பது மற்றும் அங்கு சர்வதேச படை ஒன்றை நிலைநிறுத்துவது தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா வரைந்திருப்பதாக தெரியவருகின்றது.
இந்த வாரத்தில் சில நாடுகளிடையே பகிரப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் மாற்றங்களுக்கு உட்படக் கூடியாதாக உள்ளது.
எனினும் இது இன்னும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் 15 உறுப்பு நாடுகள் இடையே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோன்று இந்தத் திட்டம் எப்போது செயற்படுத்தப்படும் என்பதும் உறுதியாகவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா திட்டம் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகளுடனும் மற்ற தரப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர்கள் ஒருவர் குறிப்பிட்டபோதும் ‘கசிந்திருக்கும் இந்த புதிய ஆவணங்கள்’ தொடர்பில் கருத்துக் கூற அவர் மறுத்துள்ளார்.
இரண்டு பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணம், ‘அமைதிக்கான சபை’ எனப்படும் நிலைமாற்று அரசுக்கு காசாவில் ஒரு தற்காலிக சர்வதேச படையை அமைக்கும் அதிகாரத்தை வழங்கும்.
அந்தப் படை தனது பொறுப்புகளை நிறைவேற்ற ‘அனைத்துத் தேவையான நடவடிக்கைகள்’, அதாவது, தேவையானால் படை வலிமையையும் பயன்படுத்த அனுமதிக்கப்படும், என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச படைக்கு பொதுமக்களை பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான உதவியை செயற்படுத்துவது, இஸ்ரேல், எகிப்துடனான எல்லை பகுதிகளின் பாதுகாப்புக்கான பணிக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
அதேபோன்று புதிதாக பயிற்சி அளிக்கப்பட்ட பலஸ்தீன பொலிஸ் படைக்கும் இந்த சர்வதேச படை பொறுப்பாகும். இந்த சர்வதேசப் படை அரசு சாராத ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களைவது மற்றும் தேவைப்பட்டால், ஆயுதங்களை நிரந்தமாக ஒழிப்பது உட்பட காசாவில் பாதுகாப்பை நிலைநிறுத்தும்.