சமூகத்தை அறிவுபூர்வமாக வளர்க்க வேண்டியது
ஒவ்வொரு எழுத்தாளனதும் காலக் கடமையாகும்!
—மெல்பேர்ண் நூல் வெளியீட்டில் பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா உரை:
——————————————————
இன்றைய சமுதாயத்திற்கு விடுக்கப்படுகின்ற செய்திகள் தான், நாளைய நம் எதிர்காலச் சந்ததிகளுக்கு நல்வழியை நாம் வகுத்துக் கொடுக்க வேண்டும். அந்த வகையில், ஐங்கரனின் நூல்களிலும் மக்களுக்கான செய்திகள் இருக்கும், இருக்கின்றன. நிறையவே இருக்கின்றன என்று பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா தெரிவித்தார்.
மெல்பேர்ணில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் தலைமை வகித்து உரையாற்றிய பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா மேலும் பேசுகையில்,
" எத்தனையோபேர் எழுதுகிறார்கள், துருப்பிடித்த குழாய்த் தண்ணீர் வரண்ட நிலத்திலே இறங்குவதைப் போல, சிலரது எழுத்துக்கள் இருக்கும், நோக்கம் இருக்கும், ஆனால் தாக்கம் இருக்காது. பள்ளத்தை நோக்கிப் பாய்கின்ற
வெள்ளத்தைப் போல சிலரது எழுத்துக்கள் இருக்கும். வேகம் இருக்கும், விடயம் இருக்காது.
எழுத்துக்கள், தெளிந்த நீரோடையில் நெளிந்து ஓடுகின்ற குளிர்ந்த நீரைபோல இருக்க வேண்டும். இடையிலே தடைகள் இல்லாமல் எளிதாக நகர்ந்து செல்கின்ற சொற்களால் அழகாக வாக்கியங்கள் அமைய வேண்டும். எழுத்து நடை இயல்பாக இருக்க வேண்டும்.
‘சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து’ என்ற வள்ளுவரின் வழிகாட்டலுக்கு அமைய சொல்ல வந்த விடயத்தைப் பொருத்தமான சொற்களால் நமக்குப் புரிய வைக்க வேண்டும்.
ஒவ்வொரு பந்தியும் வாசிப்பவர்களை வசப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வரியும் அடுத்த வரிக்கு நம் கண்களை அவசரமாக நகர்த்திச் செல்ல வேண்டும்
ஐங்கரன் எழுத்துகள், அப்படிப்பட்டவை. செல்லுகின்ற இடமெல்லாம் நான் சொல்லுகின்ற ஒருவிடயம், தமிழன் தனது வரலாற்றை எழுத்திலே வடிக்காமல் விட்டதாலும், உலக வரலாற்றை சிறிதேனும் படிக்காமல் விட்டதாலும் தான் இன்று தாழ்ந்து கிடக்கிறான் என்பதாகும்.
நமது அன்புத் தமிழை, அழகு தமிழை, இன்பத் தமிழை, இனிய தமிழை
சுந்தரத் தமிழை, நம் சொந்தத் தமிழை, சிதைந்து போகாமல் காக்கவேண்டிய கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கும். இருக்க வேண்டும். என்பது மட்டுமல்ல, இன்றைய காலகட்டத்தில், உலகத் தமிழ் இனத்தை, குறிப்பாக உணர்ச்சி வசப்பட்டு, மடத்தனங்களின் வழிப்பட்டு, உலகெங்கும் பரந்துபட்டு ஒற்றுமையின்றிக் கிடக்கின்ற இன்றைய இலங்கைத் தமிழ் இனத்தை, அறிவார்ந்த சமூகமாக வளர்த்து எடுக்கவேண்டிய கரிசினையும், அக்கறையும், கடப்பாடும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். சிறப்பாக,முக்கியமாக, கட்டாயமாக ஒவ்வொரு தமிழ் எழுத்தாளனுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
அந்தக் கடமையை ஐங்கரன் அவர்கள் மிகுந்த அக்கறையோடு, தொடர்ந்து செய்து வருகிறார் என்பதை அவர் எழுதும் கட்டுரைகளும், வெளியிடும் நூல்களும் நமக்குச் சான்று பகர்கின்றன.
இவை ஒன்றும் இலங்கை வரலாறுகள் அல்ல. ஆனால் இலங்கைத் தமிழனின் வரலாற்றை உலகத் தமிழர்கள் நினைத்துப் பார்க்க வைக்கும் பதிவுகள். ஏனைய நாடுகளில் என்னவெல்லாம் நடந்தன, என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை அறியும் போதாவது, நம்மை, நமக்கு நடந்ததை, நமக்கு நடப்பதை, நமது வரலாறு நமக்கு அறிவூட்டும், நல்ல வழிகாட்டும்.
எழுத்தாளர்கள் எதை எழுதினாலும், அவை கவிதைகளாக இருந்தாலும் சரி,
கட்டுரைகளாக இருந்தாலும் சரி, கதைகளாக இருந்தாலும் சரி,
நாவலாக, நாடகமாக, நடைச் சித்திரமாக, அறிவியல் தேடல்களாக, அறவியல் நாடல்களாக, எதுவாக இருந்தாலும், அந்த ஆக்கங்களிலே இன்றைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லுகின்ற ஒரு செய்தி, இருக்க வேண்டும்.
நாளைய சமுதாயத்திற்கும் கொடுத்துத் தொடர்கின்ற நல்லதொரு பதிவாக இருக்க வேண்டும், என்பது எனது கருத்து. இல்லயென்றால்,அந்த எழுத்தினால் பயனில்லை. அந்த எழுத்திலே நயமில்லை. அந்த எழுத்திற்கு உயிரில்லை. வாசிக்கின்றவர்களை யோசிக்க வைக்கின்ற இரண்டு வரிகளாவது இருந்தால் தான் அந்த எழுத்தாளன் சமுதாயத்தை நேசிக்கின்றான் என்று அர்த்தம்.
ஐங்கரன் தான் வாழ்ந்த மண்ணை நேசிப்பவர். அங்கே இருக்கின்ற நமது மக்களை நேசிப்பவர். இங்கே வாழ்கின்ற நமது சமூகத்தை நேசிப்பவர். இன்னும் சொல்லப்போனால் அவர் மனித இனத்தை மனதார நேசிப்பவர்.
மெல்பேர்ண் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியிடப்பட்டன. “தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்”, “இலத்தீன் அமெரிக்காவில் தேசிய இன முரண்பாடுகள்”, “ஆபிரிக்க தேசிய இனங்களும் சுயநிர்ணய விடுதலையும்”, “முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள்”“தென்கிழக்காசிய விடுதலைப் போராட்டங்கள்”, “இந்தியாவில் தேசிய இன எழுச்சியும் வீழ்ச்சியும்” ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்களின் வெளியீடு அக்டோபர் 25ம் திகதி சனிக்கிழமை சிறப்புற நடைபெற்றது.