காசாவில் நடத்திய போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமைச்சர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் 37 பேர்மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கான கைது உத்தரவுகளை துருக்கி அரசு பிறப்பித்துள்ளது.
காசாவில் திட்டமிட்டு இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இவர்கள் செய்துள்ளனர் என துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.இதன் அடிப்படையிலேயே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துருக்கி அரசின் அறிக்கையில், காசா பகுதியில் துருக்கி அரசு கட்டிய துருக்கி - பாலஸ்தீன நட்பு மருத்துவமனை பற்றியும ; குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை மீது மார்ச் மாதத்தில் இஸ்ரேல் குண்டு வீசியது.
துருக்கியின் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுபற்றி இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர், “துருக்கியின் இந்த குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரிக்கிறோம், இதனை அவமதிப்பாகக் கருதுகிறேன். இந்த நடவடிக்கை கொடுங்கோலன் துருக்கி ஜனாதிபதி எர்டோகனின் சமீபத்திய மக்கள் தொடர்பு தந்திரம்.” என்று கூறினார்.
துருக்கியின் இந்த அறிவிப்பை ஹமாஸ் வரவேற்றுள்ளது. “நமது ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கான நீதி, மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளுக்கு உறுதியளித்த துருக்கி மக்கள் மற்றும் தலைவர்களின் நேர்மையான நிலைப்பாடுகள் வரவேற்கத்தக்கது.” என்று தெரிவித்துள்ளது.
காசாவில் நடந்த போரை மிகவும் கடுமையாக விமர்சித்த துருக்கி, இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில் இணைந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியின் பேரில், அக்டோபர் 10 முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளது.