தாவூத் இப்ராஹிம் குழுவுடன் விடுதலைப் புலிகளின் எச்சங்களாக உள்ள சிலர் இணைந்து செயற்படுகின்றனர் என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து பதிலளிக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாதாள குழு நடவடிக்கையில் ஈடுபடும் தாவூத் இப்ராஹிம் குழுவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பில் நேற்று இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வினவப்பட்டது.
“ இது தொடர்பில் இதுவரையில் (நேற்று) எனக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இது பற்றி ஆராய்ந்து உரிய தகவலை வழங்குகின்றேன்.” என்று அமைச்சர் பதிலளித்தார்.
மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்ட சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் காரணமாக மேற்கு மற்றும் வட இந்தியாவில் தாவூத் இப்ராஹிம் குழு பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளதாக எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிகளைத் தேடி, இந்தக் குழு தற்போது தமிழ்நாடு மற்றும் இலங்கை முழுவதும் விடுதலைப் புலிகளின் பழைய கடத்தல் வலையமைப்பைப் பயன்படுத்தி போதைப்பொருள்களைக் கொண்டு செல்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.