ஆஸ்திரேலியா, நியூ சவூத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த நவ நாஜிகள் போராட்டத்தைக் கண்டித்த தங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அல்லெக்ரா ஸ்பெண்டர் மற்றும் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் கெல்லி ஸ்லோனே ஆகியோருக்வே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நவ நாஜிகள் குழுவினர் சனிக்கிழமை மாநில நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியை முன்னெடுத்திருந்தனர். இப்பேரணியை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து மாநில பிரீமியர்கூட கேள்வி எழுப்பியுள்ளார்.
நவநாஜிகளின் நடத்தை பயங்கரமானது என பாதிக்கப்பட்ட இரு எம்.பிக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில் பாலஸ்தீன போராட்டத்தை ஒடுக்கும் காவல்துறை, நவநாஜிகளுக்கு அனுமதி வழங்குவது பற்றி பாலஸ்தீன ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது காவல்துறையின் இரட்டை முகத்தை வெளிப்படுத்துகின்றது எனவும் கூறிவருகின்றனர்.
அதேவேளை, நாஜி சின்னத்தை காட்சிபடுத்தல் உட்பட வன்முறைக்கு வழிவகுக்ககூடிய வகையிலான நவ நாஜிகளின் நடவடிக்கைக்கு எதிராக சட்டத்தை வலுப்படுத்துவது பற்றி மாநில பிரீமியர் அவதானம் செலுத்தியுள்ளார்.