ஆஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு மூன்று மணிநேரம் இலவச மின்சாரத்தை வழங்குவதற்குரிய யோசனையை ஆளுங்கட்சியான லேபர் அரசாங்கம் முன்வைத்துள்ளது.
அதிகரித்துவரும் மக்களின் வாழ்க்கைச் செலவை குறைப்பதற்குரிய நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே இதற்குரிய திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எரிசக்தி சேமிப்பு திட்டத்தின் கீழ், சூரிய மின்சக்தி பேனல்கள் இல்லாத வீடுகள் உட்பட அனைத்து வீடுகளுக்கும் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் இலவச சூரிய மின்சாரம் வழங்க முடியும் என ரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முதற்கட்டமாக நியூ சவூத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் திட்டம் அமுலுக்கு வரும். அதன் பின்னர் ஏனைய மாநிலங்களில் அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம்மூலம் ஆஸ்திரேலியர்கள் பயன் அடைவார்கள் என லேபர் அரசு தெரிவித்துள்ளது.