ஆஸ்திரேலியா, கன்பராவில் புதிய தூதரகம் அமைப்பதற்குரிய சட்டப்போராட்டத்தில் ரஷ்யா தோல்வி அடைந்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் தூதரகம் அமைக்கப்படக்கூடாது என சுட்டிக்காட்டி, குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என்பதை நீதிமன்றம் ஏற்றுள்ளது. எனினும், ரஷ்யாவுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவால் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் உள்ள இடத்திற்கு ரஷ்யா குத்தகை உரிமம் கோரியது.
அதற்காக கிட்டத்தட்ட 3 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களைரஷ்யா செலுத்தியது. பின்னர் 99 ஆண்டுகளுக்கு அந்த இடம் குத்தகைக்கு விடப்பட்டது.
அந்த இடத்தில் ரஷ்யா தனது புதிய தூதரகத்தை கட்டும் பணியை தொடங்கியது. எனினும், 2023ஆம் ஆண்டில், ரஷ்யாவின் திட்டம் தொடரப்படுவதைத் தடுக்கும் ஒரு சட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதன் காரணமாக ரஷ்யாவின் குத்தகை ரத்து செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் ஒரு புதிய கட்டடத்தை ரஷ்யாஅமைப்பது ஆபத்து என்று, உளவுத்துறையிடம் இருந்து தெளிவான பாதுகாப்பு ஆலோசனையை பெற்றதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்திருந்தார்.
இந்த முடிவுக்கு எதிராக ரஷ்யா நீதிமன்றத்தை நாடி, சட்ட போராட்டத்தைக் கையில் எடுத்தது. ரஷ்யா பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர்கள், “சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்று வாதிட்டனர்.
எனினும், ஆ ஸ்திரேலியாவின் சட்டம் செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் உறுதி செய்தது. எனினும், அவுஸ்திரேலிய அரசாங்கம் ரஷ்யாவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.