ஆஸியில் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு அரசியல் போராளி மறைவு!
- நவீனன்
தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அவுஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியாற்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை அரசு மற்றும் ஆங்கிலேயே உறவுகளுக்கு நிலை நிறுத்த அயராது செயற்பட்ட அமைதியான மனிதர் "ரவி அண்ணை" என்று அன்பாக அழைக்கப்பட்ட கதிர் ரவிச்சந்திரா நவம்பர் பதினொராம் நாள் சிட்னியில் இன்னுயிர் ஈந்தார்.
கன்பராவில் மதிப்பிற்குரிய சமூகத் தலைவராகவும், தொலைநோக்கு பார்வையுடன் தமிழர் உரிமைகள்,
கண்ணியத்திற்காக அயராது பாடுபட்ட திரு. கதிர் ரவிச்சந்திராவின் மறைவுக்கு அவுஸ்திரேலியா தமிழர் பேரவை (ATC) அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
அவுஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியல் மற்றும் சமூகப் பணிகளுக்காக திரு. ரவிச்சந்திரா தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் (AFTA) தலைவராகவும், கான்பெரா தமிழ் சங்கத்தின் நிறுவனராகவும், உலகளாவிய தமிழ் கூட்டணியின் உறுப்பினராகவும் திறன்பட செயலாற்றியவர்.
அத்துடன் அவுஸ்திரேலியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள தமிழ் குரலை ஒன்றிணைத்து வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக 1996 ஆம் ஆண்டு கான்பெராவில் உள்ள எட்மண்ட் பார்டன் மையத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க "நீதியுடன் அமைதி" சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்வதிலும் திரு. ரவிச்சந்திரா முக்கிய பங்கு வகித்தார்.
இது தமிழர் போராட்டம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை உயர்த்திய ஒரு முக்கிய நிகழ்வாகும். மேலும் தமிழ் மக்களின் நீதி, உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த சர்வதேச ரீதியிலான செயலாக்க பரப்புரையை வடிவமைக்க உதவியது.
அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் துணிச்சல் ஆகியவை வரும் தலைமுறைகளுக்கு நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளன. அவரது ஆழ்ந்த பங்களிப்புகள் மற்றும் தியாக சேவைக்கு தமிழ் சமூகம் என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக அவுஸ்திரேலிய மண்ணில், சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு போராளி மறைந்து விட்டார். அவர் நேசித்த தாயக மக்களின் சார்பாகவும், திரு. கதிர் ரவிச்சந்திராவின் மறைவுக்கு அவுஸ்திரேலியா தமிழர் பேரவை (ATC) அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.