அரசாங்க கட்டமைப்பிலுள்ள வெளிநாட்டு ஆலோசகர்களை அப்பதவிகளில் இருந்து வெளியேற்றுவதற்கு பசுபிக் தீவு நாடான வனுவாட்டு தீர்மானித்துள்ளது.
வெளியக தலையீடுகளை தவிர்க்கும் நோக்கிலேயே தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட நிறுவனங்களில் உள்ள வெளிநாட்டு பிரமுகர்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடு தொடர்பில் பசுபிக் பிராந்தியத்தில் மிக முக்கிய நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என்பன கவலை வெளியிட்டுள்ளன. எனினும், இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கிலேயே இதற்குரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வனுவாட்டு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்குரிய சட்டமூலத்தை வனுவாட்டு நாடாளுமன்றம் கடந்தவாரம் நிறைவேற்றியது.
இதற்கமைய வெளிநாட்டு ஆலோசகர்கள் நடுநிலையான இடங்கள் மற்றும் தூதரங்களில் இருக்க வேண்டும் எனவும், அரசாங்க வளாகங்களை அனுகுவதற்கு அமைச்சரவையின் அனுமதி வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு மேற்பார்வை இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த பல பாதுகாப்பு அதிகாரிகள் வனுவாட்டுவில் பணியாற்றுகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் சில பணியாளர்கள் போர்ட் விலாவில் உள்ள தூதரகத்தில் இருந்தாலும், ஏனையோர் நேரடியாக வனுவாட்டு காவல் தலைமையகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் இணைக்கப்பட்டுள்ளனர்.
வனுவாட்டுவில் பயிற்சி திட்டங்களை மேற்கொள்ளும் சீன காவல்துறையினருக்கும் புதிய சட்ட நடைமுறை பொறுத்தும் என வனுவாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.