நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட விடயங்கள் அடங்கிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான பொறிமுறை ஒன்றை புதிய ஆண்டு பிறந்ததும் - ஜனவரியில் - ஆரம்பிக்க முடியும் என்று இன்று பிற்பகல் தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அதன் பின்னர் அந்தச் சந்திப்புக் குறித்து தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு:-
"ஜனாதிபதி பதவி ஏற்று, அதன் பின்னர் அவரது அரசும் அதிகாரத்துக்கு வந்து, ஒரு வருடத்தின் பின்னர்தான் இப்போது இந்தச் சந்திப்பு இடம்பெற்று இருக்கின்றது.
அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாகக் கூறிய விடயம் புதிய அரசமைப்பு ஒன்று வரும் என்பதாகும். அது விரைவாக, துரிதமாக நடைமுறைக்கு வரும் என்று கூறி இருந்தார்கள். ஆனால் ஒரு வருடமாகியும் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை கூறியிருந்தோம்.
அவர், அடுத்த ஜனவரியில் இருந்து நடவடிக்கை எடுப்பார் என எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்.
அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவை ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என்று உறுதி கொடுத்திருந்தார். அதைச் சுட்டிக்காட்டினோம்.
அந்த உறுதிமொழியில் ஐம்பது வீதம் நடைமுறைப்படுத்தி விட்டோம், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி விட்டோம், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எங்களுக்கு இன்னும் சொற்ப காலம் தேவைப்படுவதாக அவர் கூறினார். ஆனால் நடத்துவோம் என்ற உறுதிமொழியை அவர் தந்தார். எனினும் எப்போது என்று அவர் சொல்லவில்லை.
மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறித்து எடுக்கப்படக்கூடாது, பொறுப்புக்கூறல் பற்றிய விடயங்கள் பற்றி எல்லாம் எடுத்துரைத்தோம்.
எங்கள் மாவட்டங்களிலேயே ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பிரச்சினைகள் பற்றி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்தார்கள். அந்த விடயங்களை எல்லாம் அவர் செவிமடுத்தார். எங்களோடு பேசினார். முக்கியமான பல விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சி என்ற முறையில் தொடர்ந்து இந்த விடயங்களை எங்களுடன் கலந்துரையாடி முன்னெடுப்பார் என அவர் உறுதியளித்திருக்கின்றார்.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாங்கள் பேசியிருக்கின்றோம். குறிப்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் கைதிகள் என்ற சொற்றொடர் இருப்பதை நான் அவருக்கே சுட்டிக்காட்டினேன். அப்படிக் குறிப்பிட்டிருக்கையில் நாடாளுமன்றத்தில் அவரது அமைச்சர்கள், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று பேசி இருக்கின்றார்கள். அதையும் நான் அவருக்குச் சுட்டிக்காட்டினேன்.
அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 'அரசியல் கைதிகள்' என்று குறிப்பிடப்பட்ருப்பதை அவருக்குப் படித்தும் காட்டினேன். எட்டுப் பேர்தான் அப்படி இருக்கின்றார்கள். அவர்கள் நீண்ட காலம் இருக்கின்றார்கள். அதனைச் சுட்டிக்காட்டினேன். அவர்களின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அவர்கள் சிறையில் இருக்கின்றார்கள். அவர்கள் குற்றவாளிகளாக கண்ட முறைமையே தவறு. அத்தோடு அவர்கள் நீண்ட காலம் சிறையில் இருக்கின்றார்கள். இவற்றைக் கவனத்தில் எடுத்து அவர்களை விரைந்து விடுவிக்குமாறு கேட்டிருக்கின்றோம். அது குறித்துத் தான் அவதானம் செலுத்துவார் என அவர் தெரிவித்திருக்கின்றார்.
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயம் பற்றி நாங்கள் சுட்டிக்காட்டினோம். அங்கு எந்தக் காலத்திலும் புத்தர் சிலை இருக்கவில்லை. ஒரு விகாரை பக்கத்தில் இருந்திருக்கின்றது. அது சம்பந்தப்பட்ட ஒரு சின்னக் கட்டடம் அருகில் இருந்துள்ளது. அதைக் குளிர்பானம் விற்பனை செய்யும் நிலையமாக மாற்றினார்கள். அது அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடம். அதனை அகற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவு இருந்த போது, அதனை அகற்றாமல் தடுப்பதற்காக, புத்தர் சிலை புதிதாகக் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, இது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என்பதை அவருக்கு நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.
இதை வைத்து இனவாதத்தைக் கிளப்புவதற்கு எல்லா பக்கத்திலும் ஆள்கள் இருக்கின்றார்கள். பிக்குமார் சிலர் இங்கிருந்து அங்கு சென்று இதனை ஊதிப் பெருப்பிக்க நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதைப் பார்த்திருக்கின்றோம். அதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்பது எங்களது திடமான கருத்து. அதேவேளை எங்களுடைய மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் தேவையில்லாமல் அப்படி விகாரைகளை அமைப்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்டினோம்.
உதாரணத்துக்கு திரியாயில் இரண்டே இரண்டு பௌத்தர்கள்தான் இருக்கின்றார்கள். அங்கு இரண்டு விகாரைகள் கட்டப்படுகின்றன. குச்சவெளிப் பிரதேச செயலகத்தில் 38 விகாரைகள் புதிதாகக் கட்டப்படுகின்றன. பௌத்தர்கள் வாழும் இடத்தில், அவர்களுடைய வழிபாட்டுக்காக விகாரைகள் கட்டப்படுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் ஓர் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் காட்டுவதற்காக அப்படிச் செய்வது இனங்களுக்கு இடையில் எந்தவித நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டினோம்." - என்றார்.