செனட்டர் ஹான்சன், புர்கா அணிந்து செனட் சபைக்குள் வந்ததால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.
இஸ்லாமியர்களின் ஆடை கலாசாரத்தை செனட்டர் ஹான்சன் கடுமையாக விமர்சித்துவருபவர். பொது இடங்களில் முகத்தை மூடிய ஆடைகள் அணிவதை தடை செய்யுமாறு அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும் அது கைகூடவில்லை.
இந்நிலையிலேயே புர்கா அணிந்துவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரின் செயல் அப்பட்டமான இனவெறி செயல் என முஸ்லிம் செனட்டர்கள் விமர்சித்துள்ளனர்.
குயின்லாந்து மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டர் ஹான்சன் அணிந்திருந்த புர்காவை நீக்குமாறு வலியுறுத்தப்பட்டபோதிலும், அவர் அதனை செய்யவில்லை. இதனால் சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டிலும் அவர் இவ்வாறு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ நான் புர்கா அணிவதை அவர்கள் விரும்பவில்லையென்றால் அதனை தடை செய்யலாம்.” என்று சம்பந்தப்பட்ட செனட்டர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் வலியுறுத்தியுள்ளார்.
செனட்டர் ஹான்சனின் இந்த நடவடிக்கை அவமானகரமானது என செனட்டர் பாத்திமா பேமன் விமர்சித்துள்ளார்.