ஆஸ்திரேலிய செனட் சபைக்கு புர்கா அணிந்துவந்து சர்ச்சையை ஏற்படுத்திய வன் நேஷன் கட்சி தலைவர் செனட்டர் பவுலின் ஹான்சன், செனட் சபை அமர்வில் பங்கேற்பதற்கு 7 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் ஆடை கலாசாரத்தை செனட்டர் ஹான்சன் கடுமையாக விமர்சித்துவருபவர். பொது இடங்களில் முகத்தை மூடிய ஆடைகள் அணிவதை தடை செய்யுமாறு அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தாலும் அது கைகூடவில்லை.
இந்நிலையிலேயே நேற்று செனட் சபைக்கு புர்கா அணிந்துவந்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் செயல் அப்பட்டமான இனவெறி செயல் என முஸ்லிம் செனட்டர்கள் விமர்சித்துள்ளனர்.
குயின்லாந்து மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டர் ஹான்சன் அணிந்திருந்த புர்காவை நீக்குமாறு வலியுறுத்தப்பட்டபோதிலும், அவர் அதனை செய்யவில்லை. இதனால் சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டிலும் அவர் இவ்வாறு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் செனட்டர் ஹான்சனை இடை நீக்கம் செய்வதற்குரிய பிரேரணையை செனட்டர் பெனி வோங் முன்வைத்தார். அத்துடன், கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும் முன்மொழியப்பட்டது. இவை நிறைவேற்றப்பட்டன.
எனினும், தனது நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும், புர்வாக தடை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் செனட்டர் பவுலின் ஹான்சன்.