காசாவின் இருப்பு ஆபத்தில்: ஐ.நா. எச்சரிக்கை
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பாலஸ்தீன பிரதேசத்தின் பொருளாதாரத்தை அழித்து அதன் இருப்பையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப 70 பில்லியன் டாலர்களுக்கு மேல் செலவாகும் என்றும், அதை முடிக்க பல தசாப்தங்கள் ஆகலாம் என்றும் ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையில், காசாவில் நடந்த போரும், அந்தப் பிரதேசத்தின் மீது விதிக்கப்பட்ட தடைகளும் பாலஸ்தீனப் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன.
காசாவில் தொடர்ந்து, திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அழிவு, அந்தப் பகுதி வாழத் தகுதியான இடமாகவும், சமூக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்பப்படவும் முடியுமா என்பதில் கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுமையான, பல பரிமாண வறுமையை எதிர்கொள்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.
மேலும், 2023-24 ஆம் ஆண்டில் காசாவின் பொருளாதாரம் 87% சுருங்கியது என்றும், காசாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 161 டாலர் ஆக இருந்தது என்றும், இது உலகளவில் மிகக் குறைவு என்றும் அறிக்கை கூறியுள்ளது.
பாலஸ்தீன சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்களின்படி கடந்த 2 ஆண்டுகளில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 69,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே கடந்த மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் கடந்த 44 நாட்களில் 500 க்கும் அதிகமான முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.