இலங்கையில் நிலவும் அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 33 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 14 பேர்வரை காணாமல்போயுள்ளனர். கடந்த 48 மணிநேரத்துக்குள்ளேயே அதிகளவான உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே வரலாறு காணாத வகையில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பதுளை மாவட்டத்திலேயே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
மண்சரிவு, மரம் முறிவு மற்றும் வெள்ளம் காரணமாகவே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளன. வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. சுமார் 31 வருடங்களுக்கு பிறகு நுவரெலியா நகரம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
அதேவேளை, அடுத்த இரு நாட்களுக்கும் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கிடையில் அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதித்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.
மோசமான வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய, இன்று (27) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கேட்டறியுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரதேசங்களிலும் நிலவும் ஆபத்தான நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை அடையாளம் கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க உடனடியாக தலையிடுமாறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.