உக்ரைனுடன் அமைதியான தீர்வுக்கு ரஷ்யா பாடுபடுகிறது என்றும் அமைதியின் பாதையில் பயணிப்பதன் மூலமே உலகம் பயனடையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ரஷ்ய ஜனாதிபதி புடின் தொலைநோக்குடன் செயல்படக்கூடிய தலைவர். உக்ரைன் நெருக்கடி தொடங்கியதில் இருந்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம்.
ஒரு உண்மையான நண்பராக அவர் எல்லாவற்றையும் அவ்வப்போது எங்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறார். நம்பிக்கை ஒரு பெரிய பலம் என்று நான் நம்புகிறேன்.
சமீபத்திய நாட்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் மூலம் உலகம் மீண்டும் அமைதியின் பாதைக்குத் திரும்பும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
இந்த விவகாரம் தொடர்பாக சமீப நாட்களில் நான் உலக தலைவர்களிடம் பேசும்போதெல்லாம், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும், இந்தியாவின் நிலைப்பாடு அமைதியின் பக்கமே உள்ளது என்றும் தெளிவாகக் கூறியுள்ளேன்.
அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். உக்ரைனுடன் அமைதி தீர்வை எட்ட ரஷ்யா பாடுபடுகிறது. நாம் அமைதிப் பாதையில் பயணித்தால் மட்டுமே உலகம் பயனடையும்.” எனவும் இந்திய பிரதமர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், “உக்ரைன் உடனான அமைதி முயற்சிகளில் இந்தியா கவனம் செலுத்துவதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஷ்யாவும் இந்தியாவும் ராணுவம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளன. இந்த அனைத்து துறைகளிலும் முன்னேற நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.