பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்தது யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதலுக்கு ஒரு காரணியாக அமைந்தது என்ற இஸ்ரேல் பிரதமரின் குற்றச்சாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.
மேற்படி அங்கீகாரத்திற்கும் போண்டி படுகொலைக்கும் ஏதேனும் தொடர்பு இருப்பதாக அவர் நம்புகிறாரா என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "இல்லை, நான் அதை சந்தேகிறேன். உலகின் பெரும்பகுதியினர் இரு நாடு தீர்வை மத்திய கிழக்கில் முன்னோக்கிச் செல்லும் வழியாக ஏற்றுக்கொள்கிறார்கள் " என்று கூறினார்.
“ இது தேசிய ஒற்றுமைக்கான தருணம். நாம் ஒன்றுபட வேண்டும். அசாதாரணமான மற்றும் கடினமான காலகட்டத்தை கடந்து செல்லும் யூத சமூகத்தினருடன் நாம் கைகோர்க்க வேண்டும்.
இந்த கடினமான நேரத்தில் ஆஸ்திரேலியர்கள் யூத சமூகத்துடன் நிற்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்துவதே எனது வேலை " என்றும் பிரதமர் கூறினார்.
ஆஸ்திரேலிய பிரதமர் யூத எதிர்ப்புவாதத்தைத் தூண்டுகிறார் என இஸ்ரேல் பிரதமர் நேற்று குற்றஞ்சாட்டி இருந்தார்.
சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத மத பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதனை திட்டமிட்ட யூத எதிர்ப்புத் தாக்குதல் என்று தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் கைதாகியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் யூத எதிர்ப்புவாதத்தை ஊக்குவிப்பதாக ஆகஸ்ட் மாதம் அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பனீஸ{க்கு எழுதிய ஒரு கடிதத்தில் தெரிவித்தேன்.
அந்தக் கடிதத்தில், ‘பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் உங்கள் முடிவு யூத எதிர்ப்புத் தீயில் எண்ணெய் ஊற்றுகிறது. இது ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு வெகுமதி அளிக்கிறது. ஆஸ்திரேலியாவில் யூதர்களை அச்சுறுத்துபவர்களுக்கு இது தைரியத்தை அளிக்கிறது,
மேலும் இப்போது உங்கள் தெருக்களில் பரவுகிறது.
உங்கள் அரசும் ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு பரவுவதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. நீங்கள் நோய் பரவ அனுமதித்தீர்கள், அதன் விளைவு இன்று நாம் கண்ட யூதர்கள் மீதான கொடூரமான தாக்குதல்கள்” என்று ம் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே மேற்படி கருத்தை ஆஸ்திரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார்.