துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய வேலைத்திட்டத்தை ஆஸ்திரேலியா முன்னெடுக்கவுள்ளது. பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று (19) இந்த தகவலை வெளியிட்டார்.
சிட்னி, போண்டியில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
யூத சமூகம் உட்பட நாட்டில் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதற்கமைய துப்பாக்கிச்சட்டங்களும் கடுமையாக்கப்படவுள்ளன. இதற்குரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேசிய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மாநில அரசாங்கங்களும் சட்ட திருத்தத்துக்கு தயாராகிவருகின்றன. இதன்ஓர் அங்கமாகவே துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சமூகத்தில் உள்ள மேலதிக துப்பாக்கிகள், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இலக்கு வைத்தே குறித்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
1996 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போர்ட் ஆர்தர் ( Port Arthur) படுகொலை சம்பவத்தையடுத்து துப்பாக்கிச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. துப்பாக்கிகள் மீளப்பெறப்பட்டன.
அதன்பின்னர் 29 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டம்மூலம் லட்சக்கணக்கான ஆயுதங்கள் அழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெடரல் எனப்படுகின்ற கூட்டாட்சி நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது. இதன்போது துப்பாக்கி சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்பின்னர் இதற்குரிய நிதி ஒதுக்கீடு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீள் கொள்வனவுக்குரிய செலவை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் சரிபாதியாக பொறுப்பேற்க வேண்டும்.
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களிடம் ஆயுதங்களை கையளிக்கலாம். அவற்றை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் கண்காணிப்பு செய்வார்கள்.
போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) ஆஸ்திரேலியாவில் துக்கம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 4 மில்லியனுக்கு அதிகமான சட்டப்பூர்வ துப்பாக்கிகள் உள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
போண்டியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியிடம் மாத்திரம் 6 துப்பாக்கி உரிமங்கள் இருந்துள்ளன.
1996 ஏப்ரல் 28 ஆம் திகதி ஆஸ்திரேலியா தென்கிழக்கு டாஸ்மேனியாவில் வரலாற்று சிறப்புமிக்க போர்ட் ஆர்தர் சுற்றுலாப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இத்தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். அதுவே போர்ட் ஆர்தர் ( Port Arthur) படுகொலை எனப்படுகின்றது.