ஆஸ்திரேலிய மண்ணில் இனி பயங்கரவாத தாக்குதல் நடத்த இடமளிக்கப்படமாட்டாது, அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
போண்டி பயங்கரவாத தாக்குதல் நடத்திய இருவரில் நவீத் அக்ரம் துப்பாக்கி கையாளுதல் குறித்து விரிவான பயிற்சி பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமர்,
“ ஆஸ்திரேலியாவில் குடியுரிமை இல்லாதவர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி இல்லை. மேலும், சிட்னியின் புறநகர்ப் பகுதியில் வசிப்பவர் ஒருவருக்கு ஆறு துப்பாக்கிகள் வைத்திருக்கவும் தேவையில்லை.
கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவருக்கு அப்படித்தான் துப்பாக்கிகள் கிடைத்துள்ளன. எனவே, துப்பாக்கியை திரும்ப பெறும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.”என்று குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலிய பொலிஸார், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறியவும், ஆஸ்திரேலியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஆதாரங்களை ஆராய்ந்து வருகிறது எனவும் பிரதமர் அந்தோனி அல்பானீஸி குறிப்பிட்டார்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வீடியோ, போண்டி தாக்குதலுக்கு உந்துதலாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அது பற்றியும் விசாரணை நடக்கின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ஐ.எஸ். ஆமைப்பால் ஈர்க்கப்பட்டவர்கள் என்ற கோட்பாட்டை வலுவூட்டும் ஐ.எஸ். ஆமைப்பின் ஆன்லைன் வீடியோ அடையாளம் காணப்பட்டுள்ளது.