ஹிஸ்புல்லா அமைப்பின் கொடியை ஏந்தியவர்களில் ஆஸ்திரேலிய பிரஜைகள் அல்லாத எவரேனும் உள்ளனரா என்பது தொடர்பில் பொலிஸாரிடம், குடிவரவு அமைச்சர் தகவல் கோரியுள்ளார்.
அவ்வாறு எவரேனும் இருக்கும் பட்சத்தில் அவர்களின் விசாவை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து மெல்பேர்ணில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஹிஸ்புல்லா அமைப்பின் கொடி காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஹிஸ்புல்லா அமைப்பு ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.
பயங்கரவாத அமைப்பின் சின்னங்களை காட்சிப்படுத்துவதற்கு தடை விதித்தும், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இச்சட்டத்தின் பிரகாரம் மேற்படி சம்பவம் தொடர்பில் பெடரல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
“ பேச்சு சுதந்திரம் இருக்கின்றது, போராடும் சுதந்திரமும் இருக்கின்றது. எனினும், தடைசெய்யப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது தவறாகும்.”- எனவும் குடிவரவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மெல்பேர்ண் போராட்டத்தில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரின் படம் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் யூத சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.