“ போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கவே முயற்சித்தேன். எனினும், இச்சம்பவத்தில் மக்கள் உயிரிழந்தது கவலையளிக்கின்றது.”
இவ்வாறு ஆஸ்திரேலியாவில் தற்சமயம் நாயகன் எனப் போற்றப்படும் அகமது அல் அகமது தெரிவித்தார்.
சிரிய பின்புலத்தைக்கொண்ட அல் அகமது, தெற்கு சிட்னியில் வசிக்கின்றார். சிறிய வணிக நிலையமொன்றை நடத்திவருகின்றார்.
போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் இரு துப்பாக்கிதாரிகள் ஈடுபட்டனர்.
அவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை பறித்தார். இதன்மூலம் மேலும் பலர் கொல்லப்படுவது தடுக்கப்பட்டது.
அவரின் இந்த துணிகரச் செயலுக்கு உலகளவில் பாராட்டுகள் குவிந்தன.
மேற்படி சம்பவத்தின்போது அல் அகமதுவுக்கும் காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் அவர் முதன்முதலில் ஊடகங்களிடம் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவ்வேளையிலேயே தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.
“ என் உடலில், என் மூளையில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன். என் முன்னால் மக்கள் கொல்லப்படுவதை நான் பார்க்க விரும்பவில்லை, இரத்தத்தைப் பார்க்க விரும்பவில்லை, அவருடைய துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்க விரும்பவில்லை, மக்கள் அலறுவதைப் பார்க்க விரும்பவில்லை."
என் ஆன்மா அதைச் செய்யும்படி என்னிடம் கேட்டது," என்று தனது துணிகர செயல் பற்றி அவர் விவரித்துள்ளார்.