உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் மாட்டிறைச்சி இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு சீனா தீர்மானித்துள்ளது.
இந்த முடிவானது ஆஸ்திரேலிய கால்நடை விவசாயிகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது.
கொரோனா பெருந்தொற்றையடுத்து ஆஸ்திரேலியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட இராஜதந்திர முறுகலால் மாட்டிறைச்சி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும், இராஜதந்திர முயற்சிகளால் அது சீர்செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே 2026 இல் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்குரிய வரப்பை சீனா அறிவித்துள்ளது. இந்த வரம்பைமீறினால் 55 சதவீத வரி விதிக்கப்படும்.
புதிய ஏற்பாடுகளின் பிரகாரம் ஆஸ்திரேலியா 2 லட்சத்து 5 ஆயிரம் தொன்கள் மாட்டிறைச்சியை சாதாரண நடைமுறைகளின்கீழ் ஏற்றுமதி செய்ய முடியும். அந்த வரம்பை தாண்டியால் 55 சத வரி விதிக்கப்படும்.
மூன்றாண்டுகளுக்கு இந்த நடைமுறை அமுலில் இருக்கும். அதன்பின்னர் மீளாய்வு செய்யப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த முடிவால் ஆஸ்திரேலியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி மூன்றில் ஒரு பங்களால் குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.