வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ள நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது.
போதைப்பொருள் கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப்படை அதிரடியாக கைது செய்தது.
மதுரோவும், அவருடைய மனைவியும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது சம்பவத்திற்கு ரஷ்யா,சீனா, ஈரான், கியூபா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதேபோல, ஐநா பொதுச்செயலாளர் அண்டானியோ குட்டரெஸூம் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.
அவரது தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ' இந்த நிகழ்வுகள் ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளன. ஐநா விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முழுமையான மரியாதை அளிக்கப்பட வேண்டியது அவசியம்,' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஆலோசனை நடத்த, 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் இன்று நடக்கிறது.
கொலம்பியா விடுத்த வேண்டுகோளுக்கு சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆதரவு அளித்ததன் பேரில், இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.அமெரிக்கா - வெனிசுலா இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த போது, கடந்த அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இருமுறை நடந்தது குறிப்பிடத்தக்கது.