ஆஸ்திரேலியா வருமாறு இஸ்ரேல் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை இரத்து செய்யுமாறு பிரதமர் அந்தோனி அல்பானீஸிக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
லேபர் கட்சியின் குழுவொன்றே இவ்வாறு அழுத்தம் பிரயோகித்துள்ளது என தெரியவருகின்றது.
பாலஸ்தீன விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டே அவரது ஆஸ்திரேலிய விஜயத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் பலியானார்கள்.
இச்சம்பவத்தை இஸ்ரேல் வன்மையாகக் கண்டித்தது. அத்துடன், ஆஸ்திரேலிய பிரதமர்மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
பலவீனமான அரசியல் தலைமைத்துவம் என ஆஸ்திரேலிய பிரதமர்மீது கடும் விமர்சனக் கணைகளைத் தொடுத்திருந்தார் இஸ்ரேல் பிரதமர்.
இந்நிலையில் இஸ்ரேல் ஜனாதிபதியுடன் உரையாடிய ஆஸ்திரேலிய பிரதமர், அவரை ஆஸ்திரேலியா வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் ஜனாதிபதி, விரைவில் தமது விஜயம் இடம்பெறும் என அறிவித்திருந்தார்.
அவர் ஆஸ்திரேலியா வரும்பட்சத்தில் இனப்படுகொலை தொடர்பில் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் அவரை விசாரிக்க வேண்டும் என பாலஸ்தீன ஆதரவுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.