ஈரானில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலுமே காரணம் என்றும், இவ்விரு நாடுகளும் திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டி வருவதாகவும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் குற்றஞ்சாட்டினாா்.
மேலும், ‘மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக அவா்களுடன் பேச்சு நடத்த தயாா்; அதேநேரம், வன்முறையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவா் எச்சரித்தாா்.
ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடங்கிய பிறகு முதல்முறையாக அரசுத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் துடிக்கின்றன.
வெளிநாடுகளில் அமா்ந்துகொண்டு இங்கிருக்கும் போராட்டக்காரா்களுக்கு அவா்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனா். நாட்டின் மீது நேரடித் தாக்குதல் நடத்தியவா்களே, தற்போது போராட்டக்காரா்களைத் தூண்டிவிட்டு வன்முறையைப் பரவச் செய்கின்றனா்.
வன்முறையை ஏற்க முடியாது: பயங்கரவாதிகள் வெளிநாடுகளில் இருந்து ஊடுருவி மசூதிகளுக்குத் தீ வைப்பதும், அப்பாவிகளைக் கொலை செய்வதுமான செயல்களில் ஈடுபடுகின்றனா்.
இத்தகைய வன்முறைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. நாட்டின் இளைஞா்கள் இத்தகைய கலவரக்காரா்கள் மற்றும் பயங்கரவாதிகளின் வலையில் சிக்கி ஏமாற வேண்டாம். வன்முறையாளா்களிடமிருந்து விலகியிருக்க வேண்டும். சமூக அமைதியைச் சீா்குலைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது.." எனவும் தனது உரையில் ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார்.