அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதுவர், கெவின் ரூட், தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.
மார்ச் மாதம்வரை அவர் வாஷிங்டனில் இருப்பார் எனவும், அதன் பின்னர் பணியை நிறைவு செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31 ஆம் திகதி கெவின் ரூட் இராஜினாமா செய்வார் எனவும், அவரின் கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் இன்று அறிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான உறவை கட்டியெழுப்புவதில் கெவின் ரூட் முக்கிய பங்காற்றியுள்ளார்.
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சின் விடுதலை மற்றும் ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் முக்கிய பாத்திரத்தை வகித்திருந்தார். அவரின் இந்த சேவைக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதமே அமெரிக்காவுக்கான ஆஸ்திரேலிய தூதுவராக இவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.