கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள எவ்வித ராணுவ பலத்தையும் பயன்படுத்தப் போவதில்லை என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டில் உரையாற்றுகையிலேயே ட்ரம்ப் இவ்வாறு கூறினார்.
“ அமெரிக்கப் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் சரியான திசையில் பயணிக்கவில்லை.
கிரீன்லாந்தை நிர்வகிப்பதற்கும், அதனை பாதுகாப்பதற்கும் அமெரிக்காவால் மட்டுமே முடியும். உலகப் பாதுகாப்பிற்காக எங்களுக்கு கிரீன்லாந்து என்ற அந்தப் பனிப்பாறைத் தீவு தேவைப்படுகிறது.” – எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
நீங்கள் அதனை தர சம்மதித்தால் அதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். மறுத்தால் அதனை நாங்கள் நினைவில் கொள்வோம். இந்த விவகாரத்தில் நேட்டோ நாடுகள் நியாயமற்ற வகையில் நடந்துகொள்கின்றன.
டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தை வாங்குவது குறித்து உடனடிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது ஆர்க்டிக் தீவுகளுக்கு அமெரிக்கா அளித்த பாதுகாப்பை மறந்துவிட்டு, டென்மார்க் நன்றியுணர்வின்றி நடந்து கொள்கிறது.
உண்மையில் இந்த மிகப்பெரிய பாதுகாப்பற்ற தீவு வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகும். அது எங்கள் பிராந்தியம்.
அங்குள்ள கனிம வளங்களை வெட்டியெடுப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான அடி ஆழப் பனியைத் தோண்ட வேண்டியுள்ளது.
ஆனால் அந்த வளங்களுக்காக மட்டும் நாங்கள் அதைக் கேட்கவில்லை; தேசிய பாதுகாப்பிற்காக அது தேவைப்படுகிறது.
கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ பலத்தை பிரயோகிக்கும் எண்ணமில்லை. டென்மார்க்கிடம் பேச்சுவார்த்தை மூலமாகவே சுமூக முடிவை எட்ட விரும்புகிறோம்.” எனவும் ட்ரம்ப் மேலும் கூறினார்.