ஆஸ்திரேலியாவின் Rockhampton நகரில் உள்ள நடைபாதையில் பெண்ணொருவர்மீது பாலியல் அத்துமீறல் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் யெப்பன் லாகூன் நடைபாதையில், ஞாயிற்றுக்கிழமை காலை அந்த பெண் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அறிமுகமில்லாத ஆணொருவரால் பாலியல் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையும் தொழில்முறை ஆதரவும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள ரக்பி பார்க் வாகன நிறுத்துமிடத்தில் குற்ற இடம் அறிவிக்கப்பட்டு, அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது.
சம்பவ நேரத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள், அல்லது அருகிலுள்ள வீதிகளில் உள்ள சிசிடிவி அல்லது டாஷ் காம் காணொளி பதிவுகள் உள்ளவர்கள், தகவல்களுடன் முன்வருமாறு காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.