ஆஸ்திரேலியா தினத்தை மில்லியன் கணக்கான மக்கள் இன்று கொண்டாடும் நிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்ப அலை நிலவுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை வெப்பநிலை உச்சத்தை எட்டும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக விக்டோரியா , தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை 40 செல்ஸியஸ் டிகிரிவரை உயரும் என கணிக்கப்படுகிறது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று 48.5 டிகிரிவரை வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தீ அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் திங்கட்கிழமை நடைபெறவிருந்த சில தேசிய தின நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அடிலெய்டில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியா தின ஊர்வலம் மற்றும் ஒளி நிகழ்ச்சி கடும் வெப்பநிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
“இந்த முடிவு சமூகத்தினருக்கும் கலைஞர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், மக்களின் பாதுகாப்பும் நலனும் முதன்மையானது,” என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.