நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய எதிர்ப்பு போராட்டத் தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், ஐ.நா. (UN) மனித உரிமை சிறப்பு அறிக்கையாளர் தலையிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
தீவிரவாத சம்பவங்களுக்குப் பிறகு மனித உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கு உலகளாவிய கவனத்தை திருப்புவதே அவரது நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் போண்டி கடற்கரையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சிட்னியின் முக்கிய பகுதிகளில் போராட்டங்களை அனுமதிக்க மறுக்கும் அதிகாரத்தை NSW காவல்துறைக்கு மாநில அரசு வழங்கியது.
ஒரு தீவிரவாத சம்பவம் அறிவிக்கப்பட்டால், மூன்று மாதங்கள் வரை (இரு வாரங்களுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து) போராட்டங்களுக்கு தடை விதிக்க இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
இந்தச் சட்டம் ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் உள்ள “பொது அரசியல் கருத்துச் சுதந்திரத்தை” (implied freedom of political communication) அத்துமீறி கட்டுப்படுத்துகிறது எனக் கூறி, Blak Caucus, Palestine Action Group மற்றும் Jews Against the Occupation ’48 ஆகிய அமைப்புகள் சட்ட சவால் தொடர்ந்துள்ளன.
இந்த வழக்கில், தீவிரவாத சம்பவங்களுக்குப் பிந்தைய மனித உரிமைகள் பாதுகாப்பை கண்காணிக்கும் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளராக உள்ள பேராசிரியர் பென் சால் (சிட்னி பல்கலைக்கழக சட்டப் பள்ளி) தலையிட மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் 2023 நவம்பர் மாதம் இந்த ஐ.நா. பதவிக்கு நியமிக்கப்பட்டவர். மனித உரிமைகள், குறிப்பாக கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான கூடுகை உரிமைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
NSW உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, போராட்ட அமைப்புகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டேவிட் ஹுக் SC, பேராசிரியர் பென் சால் வழக்கில் இணைவதை தங்கள் வாடிக்கையாளர்கள் வரவேற்பதாக கூறினார்.
அதே நேரத்தில், மாநில அரசின் சார்பில் ஆஜரான பிரெண்டன் லிம் SC, சிறப்பு அறிக்கையாளரின் முழு வாதங்களை ஆய்வு செய்த பின்னரே அவரை எதிர்க்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும், NSW காவல்துறை போராட்டத் தடையை நீட்டிக்காமல் விட்டால், இந்த வழக்கு பயனற்றதாகிவிடும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்ய அரசுத் தரப்பு முயற்சி செய்யக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சட்டத்தின் கீழ், போராட்டத்தில் ஈடுபடுவோர் போக்குவரத்து அல்லது பாதசாரிகளுக்கு இடையூறு செய்ததாகக் கூறி கைது செய்யப்படலாம். நிலையான (static) போராட்டங்களில் கூட, காவல்துறைக்கு “move-on” உத்தரவு வழங்கும் அதிகாரம் உள்ளது.
போராட்டத் தடை இருந்தபோதிலும், ஜனவரி 10 அன்று “Indigenous Deaths in Custody” தொடர்பான பேரணி, ஜனவரி 26 அன்று நடைபெற்ற ஆண்டுதோறும் நடக்கும் “Invasion Day” பேரணி உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
அடுத்த மாதம் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் ஆஸ்திரேலியா வருகையை எதிர்த்து பெரும் அளவிலான போராட்டம் நடத்தவும் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை பெப்ரவரி 26 அன்று NSW மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.