இஸ்ரேல் ஜனாதிபதியின் Isaac Herzog வருகைக்கு எதிராக சிட்னியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போராட்டங்கள்மீதான தடையை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீடித்துள்ளது.
சிட்னி, போண்டி கடற்கரையில் டிசம்பர் 14 ஆம் திகதி யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தால் ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
யூத சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியது.
இந்நிலையில் தமது நாட்டுக்கு வருகை தருமாறு இஸ்ரேல் ஜனாதிபதிக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்தது.
இந்த அழைப்பை ஏற்று எதிர்வரும் 8 ஆம் திகதி இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog ஆஸ்திரேலியா வருகின்றார்.
அவரின் வருகைக்கு பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
போண்டி பயங்கரவாத தாக்குதலையடுத்து, போராட்டங்களுக்கும் காவல்துறை அங்கீகாரத்தை மறுக்க அனுமதிக்கும் சட்டங்கள் டிசம்பரில் மாநில நாடாளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றப்பட்டன.
இதற்கமையவே மேற்படி தடை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 12 ஆம் திகதிவரை தங்கியிருப்பதற்கு திட்டமிட்டுள்ள இஸ்ரேல் ஜனாதிபதி, யூத சமூகத்தினருடன் சந்திப்புகளை நடத்தவுள்ளார்.