விக்டோரியா மாநில லிபரல் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சாம் கிரோத் Sam Groth , அடுத்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனால், நீபியன் (Nepean) தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
புதன்கிழமை பிற்பகலில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெஸ் வில்சனின் அலுவலகம், சாம் கிரோத்தின் ராஜினாமாவை உறுதிப்படுத்தியது.
அவர் வரும் நவம்பர் மாநிலத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார்.
முன்னதாக, தனது துணைத் தலைவர் பதவியை பறிக்க முயன்றதாகக் கூறி கட்சிக்குள் உள்ள சில சக உறுப்பினர்கள் மீது அவர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
அதேசமயம், Herald Sun பத்திரிகையில் வெளியான சில செய்திகள் தொடர்பாக அவர் தொடுத்த அவதூறு வழக்கும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜினாமா குறித்து வெளியிட்ட அறிக்கையில்,
“நீபியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை. என்மீது அவர்கள் வைத்த நம்பிக்கைக்கு மனப்பூர்வமான நன்றி,” என சாம் கிரோத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது குடும்பத்தினருக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாம் கிரோத், முன்னாள் தொழில்முறை டென்னிஸ் வீரராக ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்.
பின்னர் விக்டோரியன் லிபரல் கட்சியின் துணைத் தலைவராக உயர்ந்த அவர், கடந்த மாதம் அரசியலை விட்டு விலகும் எண்ணத்தை அறிவித்ததையடுத்து அந்தப் பதவியிலிருந்து விலகினார்.
அவரின் திடீர் விலகலால், நீபியன் தொகுதி மக்கள் ஒரு ஆண்டுக்குள் இருமுறை வாக்குப்பதிவு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த ஆண்டு முதல் பாதியில் இடைத்தேர்தலும், நவம்பரில் மாநிலத் தேர்தலும் நடைபெற உள்ளது.
விக்டோரியன் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, சமீபத்திய இடைத்தேர்தல்கள் ஒவ்வொன்றுக்கும் சுமார் 21 லட்சம் ஆஸ்திரேலிய டொலர் செலவானது குறிப்பிடத்தக்கது.