சிட்னியில் திரைப்பட ஏஜென்ட் போல நடித்து, வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் இலங்கை பின்புலம் கொண்ட ஜெரார்ட் வாமதேவன் கைது நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
57 வயதான ஜெரார்ட் வாமதேவன் , தனித்தனியான குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையிலேயே நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை சிட்னியின் இன்டர்-வெஸ்ட் பகுதியில் உள்ள லூயிஷம் இல்லத்தில் கைது செய்யப்பட்ட வாமதேவன், சனிக்கிழமை காலை சிட்னி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
கடந்த நவம்பர் மாதம், சர்வதேச நிறுவனத்தின் காஸ்டிங் ஏஜெண்ட் எனத் தன்னை அறிமுகப்படுத்தி, போலியான ஆவணங்களை பயன்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
காவல்துறை அவரது இல்லத்தில் சோதனை நடத்தி ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தது. பின்னர் அவர் சறி ஹில்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, 11 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றம் நடந்த காலத்தில், அவர் காமன்வெல்த் குற்றச்சட்டம் 1914ன் கீழ் வழங்கப்பட்ட Recognizance Release Order உடன் இருந்ததாக நீதவான் ராபர்ட் குக் குறிப்பிட்டார்.
பிணை வழங்கப்படாவிட்டால், தனது மனநல சிகிச்சை பாதிக்கப்படும் என வாமதேவன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“தனிமை எனக்கு பெரும் தூண்டுதலாக உள்ளது. மன அழுத்தத்தை சமாளிக்க மது அருந்தியபோதுதான் இந்த குற்றங்கள் நடந்தன,” என அவர் கூறினார்.
ஆனால், காவல்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சார்ஜென்ட் காண்டிஸ் சேப்மன், பிணை வழங்கினால் மீண்டும் குற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இறுதியில், நீதவான் குக்,
தினசரி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும்,
வேலை தொடர்பான தேவைகள் தவிர இணையத்தை பயன்படுத்தக்கூடாது
என்ற உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கினார்.
அடுத்த நீதிமன்ற விசாரணையில் தாம் குற்றமற்றவர் என வாதிட உள்ளதாக வாமதேவன் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை, பெப்ரவரி 5, வியாழக்கிழமை, டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.