இஸ்ரேல் ஜனாதிபதி ஐந்து நாட்கள் பயணமாக நாளை ஆஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அவரது வருகையை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவின் பல முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக விமான நிலையங்கள், அரசு கட்டிடங்கள், யூத சமூகங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் அவர் பங்கேற்கவுள்ள நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸ்திரேலிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தவுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள், பிராந்திய பாதுகாப்பு நிலவரம், மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலை மற்றும் யூத சமூக பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் இச்சந்திப்புகளில் முக்கியமாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிட்னியின் போண்டி கடற்கரைப் பகுதியில் யூத சமூகத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் ஆஸ்திரேலியாவை உலுக்கியது. இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு அளவுக்கு பதற்றம் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னரே பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலியாவின் முடிவால் இஸ்ரேல் கடும் அதிருப்தியில் இருந்த நிலையில், போண்டி கடற்கரை தாக்குதல் விவகாரம் இரு நாடுகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த சூழ்நிலையை முன்வைத்து, இஸ்ரேல் ஆஸ்திரேலிய அரசை வெளிப்படையாக விமர்சித்ததுடன், யூத சமூக பாதுகாப்பு தொடர்பிலும் கவலை வெளியிட்டது.
இந்நிலையில், யூத சமூகத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை சீரமைக்கும் நோக்கத்துடனும் இஸ்ரேல் ஜனாதிபதியை ஆஸ்திரேலியா உத்தியோகபூர்வமாக அழைத்தது. இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அவர் நாளை ஆஸ்திரேலியாவுக்கு வருகை தருகிறார். அவரது இந்த விஜயம், இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.