நியூ சவுத் வேல்ஸ் மாநில தலைநகர் சிட்னிக்கு இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் வருகை தரவுள்ள நிலையில், அந்நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாருக்குகூடுதல் விசேட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
பாலஸ்தீன ஆதரவு அமைப்பான Palestine Action Group (PAG), ஜனாதிபதி ஹெர்சாக் வருகைக்கு எதிராக திங்கட்கிழமை சிட்னி டவுன் ஹால் பகுதியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், டவுன் ஹால் பகுதி தற்போது பாதுகாப்பு காரணங்களால் “விலக்கு மண்டலமாக” (exclusion zone) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை.
பொலிஸார் போராட்டத்தை ஹைட் பார்க் பகுதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு பலமுறை கோரியிருந்த போதும், PAG அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோஷ் லீஸ் அந்த முன்மொழிவை நிராகரித்துள்ளார்.
போராட்டம் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தின் முன்பாக நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுற்றுலா அமைச்சர் ஸ்டீபன் காம்பர், ஜனாதிபதி ஹெர்சாக் வருகையை முன்னிட்டு இதனை ஒரு ‘முக்கிய நிகழ்வு’ (Major Event) என அறிவித்துள்ளார். இதன் மூலம், பல நாட்கள் நீடிக்கும் இந்த விஜயத்தின் போது பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த அறிவிப்பின் கீழ், முக்கிய நிகழ்வு நடைபெறும் பகுதிகளில் நுழைவை கட்டுப்படுத்தவும், மக்களை அப்பகுதிகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடவும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, வெவ்வேறு குழுக்களுக்கு இடையே இடைவெளியை பராமரிக்க, மோதல் அல்லது வன்முறை ஏற்படும் அபாயத்தை குறைக்க இந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்படும் என அமைச்சர் காம்பர் தெரிவித்தார்.
ஒரு வெளிநாட்டு அரச தலைவரின் விஜயத்திற்காக இத்தகைய “முக்கிய நிகழ்வு” அறிவிப்பு விடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர், 2022 டி20 உலகக் கிண்ணம் போன்ற பெரிய விளையாட்டு நிகழ்வுகளுக்காக மட்டுமே இத்தகைய அறிவிப்பு பயன்படுத்தப்பட்டிருந்தது.