ஆஸ்திரேலியாவில் உள்ள பௌத்த அமைப்பை உளவு பார்த்ததற்காக சீன நாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018 வெளிநாட்டுத் தலையீடு தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தலையீடு தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, மேலும் இரு சீன பிரஜைகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெடரல் பொலிஸார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
25 வயதான ஆண் மற்றும் 31 வயதான பெண் ஆகியோர் நேற்று காலை கைது செய்யப்பட்டனர்.
கன்பராவில் செயல்படும் குவான் யின் சித்தா (Guan Yin Citta) புத்த மத அமைப்பின் கிளையைப் பற்றிய தகவல்களை ரகசியமாக சேகரிக்க சீனாவின் பொது பாதுகாப்பு பணியகம் (Public Security Bureau) வழங்கிய உத்தரவின் பேரில் இவர்கள் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த இருவரும், ஆகஸ்ட் மாதத்தில் இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சீன குடியுரிமை கொண்ட மற்றும் ஆஸ்திரேலிய நிரந்தர குடியிருப்பாளர் ஒருவருடன் இணைந்து செயல்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் "வெளிநாட்டு தலையீடு” (reckless foreign interference) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
2018 ஆம் ஆண்டு வெளிநாட்டு தலையீட்டை தடுக்கும் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த வழக்குடன் சேர்த்து மொத்தம் ஐந்து பேருக்கு இதுவரை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.