ஆஸ்திரேலிய லிபரல் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஆங்கஸ் டெய்லர், தமது ஆட்சியில் குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கி, நாட்டிற்குள் வரும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக, “ஆஸ்திரேலியாவின் வாழ்க்கை முறையையும் அடிப்படை மதிப்புகளையும் ஏற்காதவர்களுக்கு நாட்டின் கதவுகள் திறந்திருக்காது” என அவர் தெளிவாக எச்சரித்துள்ளார்.
தற்போதைய குடியேற்றத் திட்டத்தில் தரநிலைகள் தளர்ந்து, எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
அதிகளவிலான குடியேற்றம் வீட்டு வசதி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் குடியேற்ற விண்ணப்பதாரர்களின் பின்னணியை புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக மதிப்பீடு செய்யும் என்றும், நாட்டின் மதிப்புகளுக்கு முரணான எண்ணங்களை கொண்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.
கட்சி அறை வாக்கெடுப்பில் சுசன் லேவை தோற்கடித்து எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டெய்லர், தனது புதிய துணைத் தலைவராக ஜேன் ஹியூம்வை நியமித்துள்ளார்.
புதிய தலைவராக பதவியேற்றுள்ள ஆங்கஸ் டெய்லருக்கு முன் பல்வேறு அரசியல் சவால்கள் காத்திருக்கின்றன.
வரிக்குறைப்பு மற்றும் வீட்டுவசதி வாரியக் குறைபாடுகளைச் சீரமைப்பதாக அவர் வாக்குறுதி அளித்தாலும், கட்சியின் தீவிர வலதுசாரி நிலைப்பாடு மிதவாத வாக்காளர்களை அந்நியப்படுத்தும் அபாயம் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, முன்னாள் தலைவி சூசன் லே நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதால் முக்கிய பெண் உறுப்பினர்கள் வெளியேறி வருகின்றனர்.
ஒன் நேஷன் போன்ற மாற்றுக் கட்சிகளிடம் வாக்குகளை இழந்து வரும் சூழலில், டெய்லர் தனது புதிய தலைமையின் கீழ் கட்சியின் உள்நாட்டுச் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
வரவிருக்கும் இடைத்தேர்தல் இந்த புதிய தலைமைக்கு ஒரு முக்கிய அரசியல் சோதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.