Bondi Beach பகுதியில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், பிரதான குற்றஞ்சாட்டப்பட்ட 24 வயதுடைய Naveed Akram சிட்னி நீதிமன்றத்தில் காணொளி இணைப்பின் மூலம் முதன்முறையாக இன்று முன்னிலையாகினார்.
அவருக்கு எதிராக 15 கொலை குற்றச்சாட்டுகள் உட்பட மொத்தம் 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் தனிப்பட்ட குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பச்சை நிற சிறை உடையில், மேசை முன் அமைதியாக அமர்ந்திருந்த அக்ரம், துணை தலைமை நீதிபதி Sharon Freund suppression order (தகவல் வெளியீட்டு தடையுத்தரவு) நீட்டிப்பு குறித்து கேட்டபோது “ஆம்” என மட்டும் பதிலளித்தார்.
இந்த suppression order முதன்முதலில் கிறிஸ்துமஸ் முன் பிறப்பிக்கப்பட்டது. இதில், தாக்குதலில் உயிர் தப்பிய பலரின் அடையாளங்களை பாதுகாக்கும் நோக்கில் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படுவதைத் தடை செய்கிறது.
ஆனால், உயிர் தப்பியவர்கள் விரும்பினால் தாங்களே தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் 14 அன்று Archer Park பகுதியில் “Chanukah ” என்ற யூத மத நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் இடம்பெற்றது. இதில் 15 நிரபராதிகள் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடைபெற்றபோது அக்ரத்தின் தந்தையான Sajid Akram போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அக்ரமும் அவரது தந்தையும் 2025 அக்டோபரில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பிராந்தியப் பகுதியில் துப்பாக்கி பயிற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அக்ரத்தின் கைப்பேசியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் காணொளியில், இருவரும் ஆயுதங்களுடன் Islamic State அமைப்பின் கொடியின் முன் அமர்ந்து தாக்குதலுக்கான நோக்கங்களைப் பற்றி கருத்து தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், Archer Park அருகே வந்தபோது கூட்டத்தின்மீது கையால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை எறிந்ததாகவும், அவை வெடிக்கவில்லை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்ரத்தின் வழக்கறிஞரான Ben Archbold, தனது வாடிக்கையாளர் எந்த வகையான பதிலை வழங்குவார் என்பது குறித்து இப்போது கூற முடியாது என்றும், போலீஸ் ஆதாரங்கள் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது, அக்ரம் Goulburn Supermax Prison சிறையில் கடுமையான பாதுகாப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் 2026 ஏப்ரல் 9 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் சமீபத்திய காலத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.