ஆஸ்திரேலியா, ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Springs) பகுதியில் 5 வயது சிறுமி கடத்தி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சிறார் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மூன்று ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 25 அன்று ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் உள்ள ஒரு முகாமில் இருந்து குமஞ்சாய் லிட்டில் பேபி மாயமானார்.
ஐந்து நாட்களாக தேடுதல் வேட்டை நடைபெற்ற நிலையில் ஏப்ரல் 30 அன்று புதர் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்தச் சிறுமியைக் கொலை செய்ததாக 47 வயதான ஜெபர்சன் லூயிஸ் (Jefferson Lewis) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி கடத்தப்படுவதற்கு முந்தைய வாரங்களில், அவரது நலம் குறித்து குழந்தைகள் பாதுகாப்புத் துறைக்கு ஆறு முறைப்பாடுகள் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியது அல்லது தாமதம் செய்தது தொடர்பாக, அந்தத் துறையைச் சேர்ந்த 3 ஊழியர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களைப் பெற, குழந்தைகள் நல ஆணையர் தலைமையில் ஒரு சுயாதீன விசாரணைக்கு அமைச்சர் ராபின் கஹில் (Robyn Cahill) உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சிறுமி அவரது குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்பட்டவர் என்றும், அவரது மரணத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் பூர்வகுடி மக்களுக்கான மத்திய அமைச்சர் மலர்ந்திரி மெக்கார்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.