ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்ற விமானத்தில், பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணைக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த விமானம் அவசரமாகத் திசைதிருப்பப்பட்டுத் தரை இறக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு நேற்று மதியம் குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் அங்கிருந்த ஊழியர்களிடம் மிகவும் மோசமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டார். ஒரு கட்டத்தில் அவர் அங்கிருந்த விமானப் பணிப்பெண் ஒருவரைக் கடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த சக பயணிகளும், மற்ற விமான ஊழியர்களும் உடனடியாக விரைந்து வந்து அந்தப் பணிப்பெண்ணைக் காப்பாற்றினர்.
அந்தப் பயணியின் கட்டுப்பாடற்ற மற்றும் இடையூறான நடத்தையின் காரணமாக, விமானம் புறப்பட்ட 7 மணி நேரத்திற்குப் பிறகு, பிரெஞ்சு பாலினேசியாவின் தலைநகரான பப்பீட்டே தீவில் அவசரமாகத் தரை இறக்கப்பட்டது.
அங்கு தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பயணியைக் கைது செய்து விமானத்திலிருந்து கீழே இறக்கினர்.
இதையடுத்து விமானத்திற்கு மீண்டும் எரிபொருள் நிரப்பப்பட்டு, சுமார் 35 நிமிடங்களுக்குப் பிறகு டல்லாஸ் நோக்கிப் புறப்பட்டு, சனிக்கிழமை காலை எவ்விதப் பிரச்சினையுமின்றி இலக்கை அடைந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குவாண்டாஸ் நிறுவனம் அந்தப் பயணிக்குத் தங்கள் நிறுவன விமானங்கள் மற்றும் அதன் துணை நிறுவனமான ஜெட்ஸ்டார் (Jetstar) விமானங்களில் பயணிப்பதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.