பிரிஸ்பேனை சேர்ந்த முன்னாள் பொது வைத்தியர் (GP) மீது 148 பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
15 பெண் நோயாளிகள் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்துவந்த குயின்ஸ்லாந்து பொலிஸார், டெலியோஸ் (ஸ்டான்) தியோடோரோஸ் (74) என்பவரை இன்று கைது செய்தனர்.
அவர்மீது 94 கற்பழிப்பு (Rape) குற்றச்சாட்டுகளையும், 54 பாலியல் அத்துமீறல் (Sexual assault) குற்றச்சாட்டுகளையும் பதிவு காவல்துறை செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த முறைப்பாட்டையடுத்து, அப்பர் மவுண்ட் கிராவட் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (UMG CIB) "ஆபரேஷன் எக்ஸ்ரே காரினா" (Operation Xray Cariyna) என்ற பெயரில் சிறப்பு விசாரணையைத் தொடங்கினர்.
ஹைகேட் ஹில் பகுதியைச் சேர்ந்த இந்த 74 வயது நபர், 2000-களின் முற்பகுதியில் இருந்து 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தாராகிண்டியில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் மருத்துவராகப் பணியாற்றியபோது, 15 முதல் 40 வயதுக்குட்பட்ட 15 பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்த குடும்ப மருத்துவர் 2021-இல் ஓய்வு பெறும் வரை 'வெல்லர்ஸ் ஹில் மருத்துவ மையத்தில்' (Wellers Hill Medical Centre) பணிபுரிந்தார். மேலும் கடந்த ஆண்டு அவர் நிறுவன இயக்குனர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
அவர் ஜூன் 23-ஆம் திகதி பிரிஸ்பேன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.