ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மேலும் சில ஆஸ்திரேலிய பெண்கள், இன்னும் சில நாட்களில் சிரியாவிலிருந்து தாயகம் திரும்பக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இவ்வாறு நாடு திரும்ப உத்தேசித்துள்ள குழுவினருக்கு அரசாங்கம் எந்தவொரு உதவியையும் வழங்காது என்று ஆஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தற்போது சிரியாவின் 'அல்-ரோஜ்' அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் இவர்களை, சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் வரை 10 மணித்தியாலங்கள் தரைவழியாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
டமாஸ்கஸிற்குச் சென்றடைந்த பின்னர், அங்கிருந்து அவர்கள் ஆஸ்திரேலியா நோக்கிப் பயணிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் நான்கு பெண்களும் ஒன்பது சிறார்களும் சிரியாவில் இருந்து சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களை வந்தடைந்தனர்.
அவர்கள் ஆஸ்திரேலியாவை வந்தடைந்ததும் அந்நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் அந்தப் பெண்களில் மூவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் இருவர் மீது அடிமைத்தனம் தொடர்பான குற்றச்சாட்டுகளும், மற்றவர் மீது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தமை மற்றும் போர்ப் பிரகடனம் செய்யப்பட்ட பகுதிக்குப் பயணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு, அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, தற்போது மற்றுமொரு குழுவினர் ஆஸ்திரேலியா வரவுள்ளனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர், "ஆஸ்திரேலிய சட்டங்கள் ஏதேனும் மீறப்பட்டிருந்தால், அவர்கள் சட்டத்தின் முழுத் தண்டனையையும் எதிர்கொள்வார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு திரும்பி வந்தவர்களுக்கும் இதுதான் நடந்தது. இந்த முகாம்களில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்பதில் அமெரிக்க வெளியுறவுத்துறை மிகவும் ஆர்வமாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.