டார்வின் துறைமுகத்தின் (Darwin Port) உரிமையாளர்களால் தொடரப்பட்டுள்ள சர்வதேச சிவில் வழக்கிற்கு எதிராக, ஆஸ்திரேலிய அரசாங்கம் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் Richard Marles தெரிவித்துள்ளார்.
சீன நிறுவனமான 'லேண்ட்பிரிட்ஜ்' (Landbridge) எடுத்துள்ள இந்த சட்டரீதியான நடவடிக்கை தமக்கு ஏமாற்றம் அளிப்பதாகக் கூறிய அவர், இத்துறைமுகத்தை வாங்குவதற்கு உள்நாட்டு வாங்குநர் (Domestic buyer) எவராவது உறுதி செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து தெளிவான பதிலை வழங்க மறுத்துவிட்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய பொதுத்தேர்தலின் போது, தேசிய பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு டார்வின் துறைமுகத்தை மீண்டும் ஆஸ்திரேலியாவின் கைகளுக்குக் கொண்டு வருவோம் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதியளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, துறைமுகத்தை ஆஸ்திரேலிய வாங்குநரிடம் ஒப்படைப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசு லேண்ட்பிரிட்ஜ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தேவைப்பட்டால், நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தியாவது துறைமுகத்தை அரசு மீட்டெடுக்கும் என்றும் எச்சரித்திருந்தது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இம்மாத தொடக்கத்தில் லேண்ட்பிரிட்ஜ் நிறுவனம் ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கையைத் தொடங்கியது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கை "பாகுபாடானது" என்றும், பெய்ஜிங்குடன் (சீனா) ஆஸ்திரேலியா செய்துகொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இது மீறுவதாகும் என்றும் அந்நிறுவனம் வாதிடுகிறது.
வியாழக்கிழமையன்று டார்வின் நகருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மார்லெஸ், இத்துறைமுகத்தை உள்நாட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக மீண்டும் வலியுறுத்தினார்.
"நாங்கள் இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையிலும், மரியாதைக்குரிய வழியிலும் தீர்க்கவே முயன்றோம். இந்த வழக்கை எதிர்கொள்ள எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
அதேநேரம், இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண லேண்ட்பிரிட்ஜ் நிறுவனத்துடன் தொடர்ந்து பேசுவோம்" என்று அவர் கூறினார்.
மறுபுறம், லேண்ட்பிரிட்ஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் நியாயமான, வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த செயல்முறையின் மூலமே இந்தத் துறைமுகத்தைப் பெற்றோம்.
ஆஸ்திரேலிய அரசின் பல கட்ட மறுஆய்வுகளும் இதில் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருந்தன.
பேச்சுவார்த்தை மூலம் திருப்திகரமான முடிவு எட்டப்படாததால், எங்களின் சட்டப்பூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
டார்வின் விஜயத்தின் போது, லாரகேயா (Larrakeyah) இராணுவ முகாமில் உள்ள புதிய உள்கட்டமைப்புகளை அமைச்சர் மார்லெஸ் பார்வையிட்டார்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட '2026 தேசிய பாதுகாப்பு உத்தியோகப்பூர்வ' அறிக்கையின்படி, வட ஆஸ்திரேலியாவில் உள்ள இராணுவத்தளங்களை மேம்படுத்துவதற்காக 16 பில்லியன் டாலர் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, வட ஆஸ்திரேலியத் தளங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் பலங்கள் (US assets), ஈரானில் நடக்கும் மோதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, "அது குறித்து என்னிடம் குறிப்பிட்ட தகவல்கள் இல்லை.
அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், இருப்பினும் எனக்குத் துல்லியமாகத் தெரியவில்லை" என்று பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்தார்.