17 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாகத் தாக்கப்பட்டு, மரத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவ தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 18 ஆம் திகதி காலை 6:35 மணியளவில், டவுன்ஸ்வில்லில் (Townsville) உள்ள கேப் பல்லரெண்டா வீதிக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உடற்பயிற்சி ஓட்டத்தில் (jogging) ஈடுபட்ட ஒருவர், இந்தச் சிறுவனைக் கண்டறிந்து மீட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, Deeragun பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் மீது சித்திரவதை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் ஜூலை 24 அன்று சுமத்தப்பட்டன. அவர் ஜூலை 24 அன்று டவுன்ஸ்வில் சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அத்துடன், கெர்வான் (Kirwan) பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் மீது சித்திரவதை மற்றும் சட்டவிரோதமாகக் கடத்தி அடைத்து வைத்தல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் ஜூலை 28 அன்று சுமத்தப்பட்டன. காவலில் வைக்கப்பட்டுள்ள இவர், செப்டம்பர் 28 அன்று டவுன்ஸ்வில் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் மீது ஆயுதங்களுடன் தாக்கியமை மற்றும் சித்திரவதை செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் சிறுவர் நீதிச் சட்டத்தின் (Youth Justice Act) கீழ் விசாரிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 7 அன்று மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இவர்கள் மீது இதுவரை உத்தியோகபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.