சிறுவர்களுக்குத் தமது தளங்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கத் தவறியதற்காக, மெட்டா (Meta) நிறுவனத்திற்கு மேலதிகமாக 567 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 421 மில்லியன் பவுண்டுகள்) செலுத்துமாறு அமெரிக்காவின் நியூ மெக்சிகோ (New Mexico) மாநில நீதிபதி ஒருவர் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக அந்நிறுவனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட மிகப்பாரிய தீர்ப்பு இதுவாகும்.
சமூக ஊடக நிறுவனமான மெட்டா, காற்று மாசுபாட்டைப் போன்ற ஒரு "பொதுத் தொல்லை" (Public Nuisance) என்றும், எதிர்காலப் பாதிப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட நிதியத்தில் இந்தப் பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி பிரையன் பீட்ஷீட் (Bryan Biedscheid) தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் முந்தைய கட்டத்தில் மெட்டா செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்ட 375 மில்லியன் டொலர் அபராதத்துடன் சேர்த்து, தற்போது செலுத்த வேண்டிய மொத்தத் தொகை 942 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
மெட்டா நிறுவனத்தை ஒரு தொழிற்சாலைக்கு ஒப்பிட்ட நீதிபதி பீட்ஷீட், விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்களை அதன் தயாரிப்புகளாகவும், "சிறுவர்களின் உளவியல் பாதிப்பு மற்றும் பாலியல் சுரண்டலை, அகற்றப்பட வேண்டிய மாசுபாடாகவும்" உருவகப்படுத்தினார்.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய சமூக வலைதளங்களை இயக்கும் மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை இது குறித்துத் தெரிவிக்கையில்: "நாங்கள் இந்தத் தீர்ப்பை மறுக்கிறோம், இதற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்" என்றார்.
மேலும், "எங்கள் தளங்களில் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்; தவறான நபர்கள் மற்றும் ஆபத்தான உள்ளடக்கங்களைக் கண்டறிந்து அகற்றுவதில் உள்ள சவால்கள் குறித்து வெளிப்படையாகவே நடந்து கொண்டுள்ளோம். டீன் ஏஜ் சிறுவர்களை இணையத்தில் பாதுகாப்பதில் எங்களின் அர்ப்பணிப்பில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்; உண்மைகளைத் திரித்துக் கூறும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகத் தொடர்ந்து நீதிமன்றத்தில் போராடுவோம்" என்றும் அவர் கூறினார்.
முன்னதாக விதிக்கப்பட்ட 375 மில்லியன் டொலர் தீர்ப்பு குறித்தும் மெட்டா மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தது. சிறுவர் பாதுகாப்பு விவகாரத்தில் மெட்டாவுக்கு எதிராக ஒரு மாநில அரசு வெற்றிகரமாக வழக்குகளை நடத்தித் தீர்ப்புப் பெற்றது இதுவே முதன்முறையாகும்.
இதேபோன்ற விவகாரங்கள் தொடர்பாக மெட்டா அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. நியூ மெக்சிகோ தீர்ப்புகளுக்கு மேலதிகமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சலஸிலும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்கில் மெட்டா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கின் பின்னணி
மெட்டா நிறுவனத்தின் தளங்கள் சிறுவர்களை ஆபத்தில் தள்ளியதாகவும், வெளிப்படையான பாலியல் பொருட்கள் மற்றும் பாலியல் வேட்டைக்காரர்களுடன் (sexual predators) தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களை ஆட்படுத்தியதாகவும் கூறி, நியூ மெக்சிகோ மாநில சட்டத்தரணிகளால் 2023 இல் தொடரப்பட்ட வழக்கிலிருந்தே இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.
விசாரணையின் முதல் கட்டத்தில், மெட்டாவின் பரிந்துரை வழிமுறைகள் (algorithms) இளம் பயனர்களை ஆபத்தான உள்ளடக்கங்கள் மற்றும் தொடர்புகளை நோக்கியே 'வழிநடத்தியதால்', அது நியூ மெக்சிகோவின் நியாயமற்ற நடைமுறைகள் சட்டத்தை (Unfair Practices Act) மீண்டும் மீண்டும் மீறியது கண்டறியப்பட்டது.
(ஒரு பயனர் தனது தளத்தில் பார்க்கும் உள்ளடக்கங்களைத் தானாகவே தேர்ந்தெடுத்துக் காட்டும் மெட்டாவின் தொழில்நுட்பக் கருவிகளே இந்த algorithm-கள் ஆகும்.)
விசாரணையின் இந்த இரண்டாம் கட்டத்தில் தீர்ப்பளித்த நீதிபதி பீட்ஷீட், மெட்டாவின் தீங்குகள் "பொதுத் தொல்லை" என்ற நிலையை எட்டியுள்ளதாகக் கண்டறிந்தார். அதாவது, பொதுமக்களைப் பெருமளவில் பாதிக்கும் அளவுக்குச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புச் சிக்கலாக இது மாறியுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு விவகாரத்தில் மெட்டா பெற்ற மிகப்பெரிய அபராதம் என்பது மட்டுமல்லாமல், ஒரு சமூக ஊடக நிறுவனம் "பொதுத் தொல்லை" எனத் தீர்ப்பளிக்கப்படுவது இதுவே முதன்முறை எனத் தெரிகிறது.
"தொழிற்சாலையால் உருவாகும் நச்சு மாசுபாடு, சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கான பொதுமக்களின் உரிமையைப் பாதிப்பதைப் போல, சிறுவர்கள் மீது மெட்டாவின் தளங்கள் ஏற்படுத்தும் தீங்குகள் வெறும் ஆன்லைனுடன் முடிந்துவிடாமல், நிஜ உலகிற்கும் பரவுகின்றன. இது பாதிக்கப்பட்ட சிறுவர்கள், அவர்தம் குடும்பங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சட்ட அமலாக்கத்துறைக்குச் சமூக ரீதியான பாரத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது" என்று நீதிபதி தனது தீர்ப்பில் எழுதியுள்ளார்.
"இந்த பாதிப்புகளின் பரவலான தாக்கம் மற்றும் பக்கவிளைவுகளைக் குறைப்பதற்கான" முயற்சிகளுக்கு நிதி உதவி செய்யவே மெட்டா உருவாக்கப் பணிக்கப்பட்டுள்ள இந்த நிதியம் பயன்படுத்தப்படும் என நீதிபதி பீட்ஷீட் கூறினார்.
இந்தத் தொகையில் பெரும் பகுதியான $420 மில்லியன், "பொருத்தமான மருத்துவ அல்லது பிற நடத்தை சார்ந்த சுகாதார திட்டங்கள் மற்றும் நிபுணர்களுக்கு" நிதி வழங்குவதன் மூலம், மெட்டாவின் தளங்கள் ஏற்கனவே ஏற்படுத்திய பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.