ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு விக்டோரியாவிலுள்ள மவுண்ட் புல்லரில் (Mount Buller) காரொன்றின்மீது மரம் விழுந்ததில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று காலை சுமார் 9:15 மணியளவில் மவுண்ட் புல்லர் சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தைத் தொடர்ந்து மவுண்ட் புல்லர் சாலை இரு வழிகளிலும் மூடப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ள அபாயம்
பிராந்தியத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மாநில அவசரக்கால சேவை (SES) குழுவினருக்கு இரவோடு இரவாக 80-க்கும் மேற்பட்ட உதவி அழைப்புகள் வந்துள்ளன. இதுவரை 5 நீர் மீட்புப் பணிகள் (Water Rescues) வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
லெக்ஸ்டன் (Lexton) பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து இருவர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தொடர் மழையால் அவோகா (Avoca), லெக்ஸ்டன் மற்றும் பியூபோர்ட் (Beaufort) உள்ளிட்ட பல பகுதிகளில் பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி மூடப்பட்டுள்ளன.
பல்லாரத் (Ballarat) மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு முதல் 135 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.
மண் மிகவும் ஈரப்பதமாக இருப்பதால் நதிகளில் வெள்ளப்பெருக்கு வேகமாக அதிகரிக்கும் என எச்சரித்துள்ள அவசரக்கால சேவையினர், பொதுமக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.