சிட்னிக்கு மேற்கே உள்ள 'புளூ மவுண்டன்ஸ்' (Blue Mountains) பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, நபர் ஒருவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றத்தடுப்புப் பிரிவு (Sex Crimes Squad) மற்றும் கலவரத் தடுப்புப் பிரிவு (Riot Squad) அதிகாரிகள், லுயுரா (Leura) பகுதியில் அமைந்துள்ள குரோஸ் வீதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் சோதனைக்காகச் சென்றனர்.
அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்தில், அங்குள்ள ஒரு படுக்கையறையில் 41 வயதுடைய நபர் ஒருவர் கத்தியுடன் இருப்பதை அவர்கள் கண்டனர்.
காவல்துறையினர் அறைக்குள் நுழைய முயன்றபோது, அந்த நபர் தங்களை நோக்கி வர வேண்டாம் எனத் தடுத்து, கத்தியால் தன்னைத்தானே குத்திக் கொண்டார்.
அதிகாரிகளும் தொடர்ந்து அங்கு வந்த முதலுதவி மருத்துவக் குழுவினரும் அவருக்கு உடனடிச் சிகிச்சை அளித்தபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காவல்துறையின் சோதனை ஆணைச் (Search Warrant) செயல்பாட்டின் போது இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதால், இது குறித்த 'முக்கிய சம்பவ விசாரணை' (Critical Incident Investigation) தொடங்கப்பட்டுள்ளது. மவுண்ட் ட்ரூயிட் காவல் நிலையத்தின் சுயாதீனக் குழு ஒன்று இந்த மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், இது தொடர்பான அறிக்கை மரண பரிசோதகரிடம் (Coroner) சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், தொழில்முறை தரநிலை ஆணையம் (Professional Standards Command) மற்றும் சட்ட அமலாக்க நடத்தை ஆணையத்தின் (LECC) நேரடி மேற்பார்வையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
புளூ மவுண்டன்ஸுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடையே லுயுரா பகுதி மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். சம்பவம் நடந்த குரோஸ் வீதியானது, அப்பகுதியின் பிரதான வர்த்தக மையமான 'லுயுரா மோல்' (Leura Mall) பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.