நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து, தாம் தேசியக் கட்சியின் (National Party) தலைவராகத் தொடர்ந்து நீடிப்பதாகவும், கட்சியின் முழுமையான ஆதரவு தனக்கு இருப்பதாகவும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் (Christopher Luxon) அறிவித்துள்ளார்.
வெலிங்டனில் புதன்கிழமை காலை அவசரமாகக் கூட்டப்பட்ட தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (Caucus) கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமரின் தொடர்ச்சியான சில தவறுதலான செயற்பாடுகளைத் தொடர்ந்தே இக்கூட்டம் கூட்டப்பட்டது.
கடந்த வாரம் நேரலை வானொலி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட லக்ஸன், கட்சியின் சக உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல், நாட்டின் தேர்தல் முறைமை குறித்த சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றுக்கு தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், ரோட்டோருவா வர்த்தக சபை கூட்டத்தில் உரைநிகழ்த்திய போது, வர்த்தகங்கள் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதை விட "பொறுப்புடன் செயற்பட வேண்டும்" எனக் கூறியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
நாட்டின் தலைநகரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய லக்ஸன், புதன்கிழமை காலை தனது தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
"எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவும் எனக்கு உள்ளது. எங்கள் கட்சி ஒற்றுமையாகவும், வரவிருக்கும் தேர்தலில் வெற்றிபெறும் உறுதியோடும் உள்ளது," என்று அவர் கூறினார்.
மேலும், "அடிப்படைப் பிரச்சினைகளைச் சரிசெய்து, எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான தேசியக் கட்சியின் நேர்மறையான திட்டத்திலேயே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இதன் மூலம் இந்த நாட்டின் அளப்பரிய ஆற்றலை வெளிக்கொண்டுவந்து, நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் நம்மை விட சிறப்பாக வாழ வழிவகுப்போம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
நியூசிலாந்து மக்கள் வரும் நவம்பர் 7 ஆம் திகதி வாக்களிக்கவுள்ளனர்.