ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் மாதம் Bondi கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்து, அவரது ஆயுதத்தைப் பறித்து கதாநாயகனாகப் போற்றப்பட்ட நபர் மீதான தாக்குதல் வழக்குகளை பொலிஸார் திரும்பப் பெற்றுள்ளனர்.
தென்மேற்கு சிட்னியில் உள்ள வீடு ஒன்றில் தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, அகமது அல் அகமது (Ahmed al Ahmed) மீது கடந்த ஜூன் மாதம் குடும்ப வன்முறைத் தாக்குதல், பின்தொடர்ந்து அச்சுறுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. ஆனால், அகமது தன் மீதான இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்திருந்தார்.
இந்நிலையில் புதன்கிழமை, சிட்னி நீதிமன்றத்தில், அகமது 12 மாத காலத்திற்குத் தனது தந்தையுடனான தொடர்பைக் கட்டுப்படுத்தும் குடும்ப வன்முறைத் தடுப்பு உத்தரவுக்குக் (AVO) கட்டுப்பட ஒப்புக்கொண்டதையடுத்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் அவர் மீதான குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றனர்.
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய 44 வயதான அகமது, தான் ஒரு "சுதந்திர மனிதன்" என்றும், அமைதியை விரும்புவதாகவும் கூறி இந்நடவடிக்கையை வரவேற்றார்.
தனது தந்தையைத் தாக்குவதோ, அச்சுறுத்துவதோ அல்லது துன்புறுத்துவதோ கூடாது என்ற உத்தரவை, குற்றங்களை ஒப்புக்கொள்ளாமலேயே அகமது ஏற்றுக்கொண்டதாக அவரது பாதுகாப்புத் தரப்பு வழக்கறிஞர் முகமது சக்ர் (Mohamed Sakr) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சிட்னியின் பொண்டி கடற்கரையில் யூத சமூக நிகழ்வொன்றின் போது, 15 பேரைக் கொன்ற இரு துப்பாக்கிதாரிகளில் ஒருவரை அகமது தைரியமாக மடக்கிப் பிடிக்கும் காட்சிகள் வெளியாகி உலக அளவில் பேசப்பட்டன.
சஜித் அக்ரம் (Sajid Akram) என்பவரிடமிருந்து அகமது துப்பாக்கியைப் பிடுங்கிய நிலையில், நவீத் அக்ரம் (Naveed Akram) என்ற மற்றொரு துப்பாக்கிதாரியால் அகமது பலமுறை சுடப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் பல தசாப்தங்களில் நடந்த மிக மோசமான இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை, யூத சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என பொலிஸார் பின்னர் அறிவித்தனர்.
தாக்குதல் நடந்த சில நாட்களில், அகமதுவுக்காக நடத்தப்பட்ட நிதி திரட்டல் மூலம் 2.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களுக்கும் அதிகமான (சுமார் $1.7 மில்லியன்) நிதி திரட்டப்பட்டது. மேலும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) மருத்துவமனைக்குச் சென்று அகமதுவை நேரில் சந்தித்து நலன் விசாரித்தார்.
இதனிடையே, அகமதுவுக்குக் கிடைத்த நன்கொடைப் பணத்தைப் பறிக்க முயன்றதாகவும், அவரை அச்சுறுத்தியதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது இரு சகோதரர்கள் மீது அண்மையில் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.